Monday, July 18, 2016

13.01.1999



கையாலே வரையாத உயிரோவியமே..
கைத்திறனை காட்டி நீ
வரைந்த ஓவியமோ நுட்பமான அழகு..
உன் பொறுமை குணத்தோடு
மனதிறனும் சேர்ந்து கற்பனையால் வந்த
அந்த ஓவியம் வெகுநேர்த்தி..
என் நெஞ்சின் பாராட்டை
பெற்றுக்கொள்ள வாராயோ..
உயிரோவியமே நீ எனக்கு என்றானபின்
மற்றதெல்லாம் உன்போல அழகில்லை..
அழகியே..
உன்னை பார்க்க முடியாமல்
என் பார்வையால் என்ன பயன்..?
தேன்மொழி சொல்லெடுத்து
என் மனதை வருடிவிடு..
தேன் குளத்தில் விழுந்துவிட்ட தேனியைப்போல
நானும் உன்னாலே
இன்று காதல் சாகரத்தில்
கரைசேர்வேன் நீ வந்தால்..
இன்றேல்..
உலகத்தில் நானிருப்பேன்..
இந்த உலகத்தில் என் நாள் மட்டும்..
என்றென்றும் உன்

நினைவில்..

12.01.1999



பார்த்த விழி மூடவில்லை..
பால்வடியும் உன் மோகமோ
என் பார்வையிலே மறையவில்லை..
என் விழியில் கலந்துவிட்டாய்
இன்னுயிரே நீதான்..
உன் மடியில் தலை வைத்து
கண்ணுறங்கும் நாளெதுவோ..
நேரினிலே பார்க்க முடியாதோ என்ற
துன்பம் உன்னாலே விலகியது..
புகைப்படம் பார்த்துக்கொண்டே
பசி தூக்கம் நான் மறந்தேன்..
கண்மணியே இருவருமே களிப்போடு
கலந்திருக்கும் நாள் விரைந்து வந்திடுமே..
தூக்கங்கள் தொலைகிறது உன்னை
நான் நினைக்கையிலே..
துயரங்களும் விலகியது
உன் முகத்தை நினைத்தாலே..
தூக்கம் தொலைந்ததலே துயரங்கள் ஏதுமில்லை..
நன்னாள் வரும்
ஒரு பொன்னாள் வரும்
எந்நாளும் பிரிவில்லாத

மணநாளும் விரைந்து வரும்..

11.01.1999



என் இனிய கள்ளியே..
எப்படி திருடினாய் என்னை...?
எத்தனையோ மங்கையரிடம் தப்பி வந்த என்னை..
நீ மட்டும் எப்படி திருடினாய்..?

பார்த்த அன்றே
உன் பார்வையால் திருடினாய்..!
பேச துவங்கியதும்
உன் வார்த்தையால் திருடினாய்..!
நாட்கள் செல்ல செல்ல
என் இதயத்தை பிடிங்கினாய்..
இப்பொழுது என் முழுமையையும்
நீ எப்படியோ திருடிவிட்டாய்..
நான் எப்படி உன்னிடம் என் மனதை
திருட்டுக்கொடுத்தேன்...?
கண் பார்வை...
இதழ் சிரிப்பு..
மெய் அன்பு கொண்டு நீ
என்னை திருடி விட்டாய்..
கள்ளியே..
என் இனிய கள்ளியே..
நான் மகிழ்கிறேன்..
உன்னிடம் என்னை இழந்ததற்கு..
வாழ்வின் எல்லை வரை
கூட வர ஒரு அன்பை நான் விரும்பினேன்..
இன்று உன்னாலே நிச்சயம்
அதை அடைவேன்..
அன்பே..
உன்னை நான் வாழ்வு முழுவதும்

ஆராதிப்பேன்..

09.01.1999



என்ன எழுதுவது.....??
விரிந்து பரந்த ஆகாயத்தையா..
விழுந்து கிடக்கம் பூமியையா..
தலை களைந்து கிடக்கும் காடுகளையா..
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலைகளையா..
சலசலத்து ஓடும் நதிகளையா..
சங்கீதம் பாடும் பரவைகளையா..
கவிதை பாடும் பூக்களையா..
கண் சிமிட்டும் வின்மீன்களையா..
கள்ளமின்றி சிரிக்கும் குழந்தையையா..
காதல் சொன்ன உன்னையா..

நான் சிறகு இல்லாமலேயே வானில்
மகிழ்ச்சியோட பறக்கிறேன்..
உன் அழகிய கண்கள்..
உன் செவ்விதழ்கள்..
சங்கு கழுத்து..
பிறை நெற்றி..
பூச்சூடும் கருன்கூந்தல்..
மெல்லிய கைவிரல்கள்..
பஞ்சுப் பாதங்கள்..
நான் எதை எழுதுவது..
பார்க்கும் பொருள் எல்லாம்
கேட்கும் மொழி எல்லாம்
சுவாசிக்கும் மூச்சி எல்லாம்
பேசும் வார்த்தை எல்லாம்
எல்லாமே நீயாக இருப்பதால்..
நான் எதை எழுதினாலும் அது

நீயன்றோ...

08.01.1999



கனவுகள்
மனதின் நினைவுகள்....
நெஞ்சத்து ஆசைகளின் ஆட்சிக் களமன்றோ..
கனவின் களங்கள்
காலங்களை பொருத்து
மாறிக்கொண்டே அல்லவா இருக்கிறது..

எந்தன் கனவு இன்று உன்னை சுற்றியே..
ஒவ்வொரு செல்லும் உன் பேர் சொல்லும்..
என் மனம் இப்பொழுது
மிக அமைதியாக உள்ளது – உன்னாலே..
என் கனவுகளோ
மிக இனிமையாக உள்ளது – உன்னாலே..
என் எழுதுகோல் எழுதும் ஒவ்வொரு
எழுத்தும் நீயே..
கனவின் ஆட்சியில்
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் தேவியே..
நினைவின் போது
என்னை வந்து அணைத்துவிடு..
உன் இதழாலே
என் இதழில் ஒரு நீண்ட கவிதை

வரைந்து விடு..

07.01.1999



இனிமையான நினைவுகளாலே
என் வாழ்க்கையின் எல்லை விரிகிறது..
உன்னாலே என்
கற்பனையின் எல்லையும் விரிகிறது..
பனிக்கால மார்கழியின் குளிருக்கு இதமாக
என் நெஞ்சத்தில் நீ..
முக்கடலும் முத்தமிட்டுக்கொள்ளும்
கன்னியாகுமரி...
என் நெஞ்சில் அழியாத பெயரன்றோ..
முத்தமிழை நான் சுவைத்து ருசித்தாலும்..
உன் நினைவின் சுவையால் தான்
பிறந்திடுது கவிதை..
திக்கெட்டும் சுற்றிவரும் காற்றும் கூட
உன் பெயரை சொல்லுவதால் தான்
என்னுள்ளே செல்கிறது..
சுட்டெரிக்கும் சூரியனும் உன் பெயரை சொல்ல
மேகத்தில் முகம் மறைக்கும்..
மென்கதிரை மெல்ல விடும்..

சொல்லிருக்கும்...
மொழியிருக்கும்..- அதில்
நீயின்றி சுவை எப்படி இருக்கும்..

06.01.1999



வெண்மேகத்தில் மிதந்துவரும்
வெண்ணிலவுப் பெண்ணே..
என்னை பிடிக்காதா....?
என்று
வானம் உன்னை கேட்டால்
உன் மனதின் நிலை என்ன...??
என் மனமோ துடிக்கிறது..
இந்த கேள்வியால்..
உன் நினைவுகள் வாட்டிய
பழங்கதைகள்
என் நெஞ்சை இன்னும் நீங்கவில்லை..
கண்கள் கலங்கிடும் நிலையின்று..
ஆனால் கேட்டது நீயன்றோ..
அதனால் தேற்றிக்கொண்டேன்..என் நெஞ்சை..
உயிரே உயிரை வெறுத்திடுமா?
உன்னை மனதும் மறுத்திடுமா..?
என்றும் கண்ணில் நீயம்மா..

பார்த்தே அன்றே என்னுயிர் உன்னோடு..
நான் உனக்கு சொல்லாததால் தான் இந்த கேள்வி..
தெரிந்து கொள்..
நீயின்றி இனி இப்புவியில் எனக்கு
வேறு இன்பம் ஏது..?

05.01.1999



என் நினைவுகள் சங்கிலியாய்
நீண்டுகொண்டே இருக்கின்றன..
முடிவில்லா வானத்தின் எல்லையைத் தேடி..
இதோ.. என்  பயணம்..
கற்பனை சிறகுகளை என்று கழற்றி வைத்தேன்...
இரு கண்கொண்டு என்னை சுற்றி
நான் பார்த்தேன்..
எத்தனை விதமான பிறவிகள்..
எத்தனை விதமான மனிதர்கள்..
எங்கும் எதிலும் தேடல்களே..
என் தேடலில் ஒரு பகுதி முடிவுக்கு வந்தது..
உன்னை பார்த்த பின்பு....

சுற்றிவரும் உன் சின்ன கண்கள்..
என்னை கட்டிப்போட்டது இன்று..
கொட்டிக்கொண்டிருக்கும் பாலருவியில்
குளித்தெழுந்தது போல ஒரு புத்துணர்வு..
சொல்லிச்சொல்லி பார்த்தேன் உன் பெயரை..
நெஞ்சில் புது அர்த்தங்களாய். பழைய நினைவுகள்..
சிறகில்ல இப்பயணம் சிரமமே இல்லை..

உன்னாலே..

04.01.1999



என்றுமில்லா சந்தோசம் எந்தன் மனதில்..
ஏனோ தயக்கம் எல்லோருடன் பகிர..
உள்ளம் கவர்ந்து உறவும் பூத்தது..

பார்த்த நாள் முதல் மனதில் தேங்கிய
நினைவுகளுக்கு விடுதலை..
சிறகு இல்லாமல்

வானவெளியில் பறப்பது போன்ற உணர்வு..
ராகமில்லா பாடல்களுக்கு ராகமா..
காட்டு மூங்கிலிலே நீ நாதமானாய்..
பாலை நிலதிற்க்கொரு நீரூற்றாய்..

தயக்கங்கள் என்றுமே பாதை காட்டாது..
சலனங்கள் மட்டுமே சங்கீதம் ஆகாது..
சுதியோடு லயம் சேர்ந்து ஒன்றான நெஞ்சம்..
இனி..
இந்த காற்றுக்கு தடை ஏது?
காலமே இக்காதலுக்கு நல்விடை கூறு..